Thursday, November 10, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்


தொகுப்பாளர்: திராவிடர் இயக்க ஆய்வாளர் அருணாஅரசுகோ பாவேந்தன்

(அன்றைய சென்னை மாகாணத் தில் திராவிடர் இயக்கத்தின் தாய்க் கழகமான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பை 1916ஆம் ஆண்டு தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர் டி.எம். நாயர் (1868 _ 1919). பாலக்காடு மாவட்டம் திரூரில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர் தந்தை பெரியாரால் திராவிட லெனின் என போற்றப் பட்டவர். பொது வாழ்க்கையில் 1904ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த டி.எம். நாயர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். காலனிய அரசு உருவாக்கிய தொழிற்சாலை களுக்கான தொழி லாளர் ஆணையத்தின் முக்கிய உறுப் பினராகச் செயல்பட்டவர். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1912-_1916 கால கட்டத்தில் பணியாற்றிய போது தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்பற்றி பட்டுக் கோட்டையில் நடந்த தஞ்சாவூர் ஜில்லா மாநாட்டில் ஆற்றிய உரையின் பகுதிகளை சென்னை யிலிருந்து வெளிவந்த பிழைக்கும் வழி மாத இதழ் நவம்பர் (1912) டிசம்பர் (1912) இதழ்களில் வெளியிட்டுள்ளது. டி.எம். நாயரின் வாழ்க்கை வரலாற்றெழுதுதலுக்கு உதவும் இந்த அரிய ஆவணம் முதன்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகின்றது.)
தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ்

நாளது நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று பட்டுக் கோட்டையில் தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ் நடந்தது. அப்பொழுது சென்னையில் பிரபல வைத்யரும், முனிஸிபல் கமிஷ னரும், இப்போது சென்னை லெஜிஸ் லேடிவ் கௌன்ஸில் மெம்பராய் எலெக்ஷன் செய்யப் பெற்றவருமான டாக்டர் டி.எம்.நாயர் அக்ராஸனம் வகித்து, தஞ்சாவூர் ஜில்லா நீர்ப் பாசனத்தைப் பற்றியும், அந்த ஜில்லா விலிருந்து கூலிகள் அந்ய தேசங் களுக்குப் போவதைப் பற்றியும், டிப்பைப் பற்றியும், ஸ்தல சுய ஆட்சியைப் பற்றி யும் பேசினார். அதன் பிறகு கான்ப ரென்ஸில் பல தீர்மானங்கள் செய்யப் பட்டன.

டாக்டர் நாயர் நீர்ப் பாச னத்தைப் பற்றிப் பேசியதையும் கான்ப ரென்ஸில் நடந்த தீர்மானங்களைப் பற்றியும் இந்த ஸஞ்சிகையில் யெழுதி யிருக்கிறோம். டாக்டர் நாயர் பேசிய மற்ற விஷயங்களைப் பற்றி அடுத்த ஸஞ்சிகையில் விவரிப்போம்.

தஞ்சாவூர் ஜில்லாவில் அநேக புத்திமான்கள் இருப்பது போலவே ராஜதானியிலுள்ள மற்ற ஜில்லாக்களை உத்தேசித்து தஞ்சாவூர் ஜில்லா நிலத் தின் வளப்பமும் ச்லாக்யமாயிருக்கிறது. ஆனால் நிலம் விளைவதும் விவஸாயம் கடைத்தேறுவதும் மழையையும் காவேரியில் வரும் ஜலத்தையும் பொறுத்திருக்கிறது.

ஆப்ரிக்காவில் இஜிப்ட் என்பதாக ஒரு தேசம் இருக்கிறது. அதில் நைல் என்பதாக ஒரு பெரிய நதி ஓடுகிறது. லார்ட் ரோஸ்பரி என்பவர் ஒரு ஸமயம் இஜிப்ட் தேசத்தைப் பற்றி பேசியபோது இஜிப்ட் தேசமே நைல் நதியாகும், நைல் நதியே இஜிப்ட் தேசமாகும் என்றார். அப்படியே நாமும் தஞ்சாவூரே காவேரி நதியாகும், காவேரி நதியே தஞ்சாவூர் ஜில்லாவாகும் என்று சொல்வதும் ஸரியாகும்.

காவேரியில் சலாக்யமான வண்டல் வருவதால் நாளது வரையில் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு தென்னிந் தியாவின் தோட்டம் என்று கௌரவம் இருந்து வருகிறது. இந்தக் காவேரி இல்லாவிட்டால் தஞ்சையின் நிலைமை மிகவும் குறைவு அடைந்திருக்கும். இந்த விஷயம் வெகுகாலமாகத் தெரிந்ததே. இதை உத்தேசித்து ஹிந்து ராஜாக்கள் வெகுகாலத்துக்கு முன்னாலேயே காவேரியிலிருந்து பாசனத்துக்கான வேலைகள் ஏற்பாடு செய்ய ஆரம் பித்தார்கள். இங்கிலீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுவதற்கு முன்னாலேயே இவை ஆரம்பிக்கப்பட்டன.

அநேக ஆறுகளிலுள்ள ஜலத்தைத் தேக்கி பக்கத்தில் உள்ள நிலங்களுக்குப் பாய்ச்சுவதற்குக் கட்டிய பழைய கட்டிடங்கள் இன்னும் அநேகம் இருக்கின்றன.

அவைகளால் தஞ்சாவூர் அரசர்கள் நீர்ப்பாசன விஷயமாய் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டி ருந்தார்கள் என்பது தெரிகிறது. க்ராண்ட் அணைக்கட்டு என்று சொல் லப்படும் கல்லணையுங் கூட வெகு காலத்துக்கு முன்னால் கட்டப்பட்டதே.

சில வருஷங்களுக்கு முன்னால் சில மாறுதல்கள் மாத்திரம் செய்யப்பட்டு தூக்கு ஷட்டர்கள் போட்டிருக் கிறார்கள். உண்மையில், 1836 ஆம் வருஷத்தில் ஸர் ஆர்தர் காட்டன் என்பவர் அப்பர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் மேல் அணைக்கட்டு கட்டின வரையில், தஞ்சாவூரார்கள் ஹிந்து அரசர்கள் செய்த பாசன ஏற்பாட்டின் பலனையே அடைந்து வந்தார்கள்.

1801 ஆம் வருஷத்தில் ப்ரிட்டிஷார் தஞ்சாவூரை தமது வசம் அடைந்ததற்கு முன் மாத்திரம் தேசமானது குழப்பமான நிலைமையில் இருந்ததால் காவேரி நீராரம்பங்களின் பாசனம் மிகவும் கெடுதலாயிருந்தது.

கம்பெனியார் தஞ்சாவூரைக் கைவசப் படுத்திக் கொண்டவுடனே காவேரி நீராரம்பங்களின் பாசனத்தை வ்ருத்தி செய்வதற்கு வேண்டிய ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன.

ஆரம்பத்தில் காவேரியில் உள்ள அதிக மணலை அப்புறப் படுத்துவதிலேயே வெகுவாய் ப்ரயத்னங்கள் செய்யப் பட்டன. ஆனால் அந்த முயற்சிகளால் அதிக பலன் ஒன்றும் உண்டாகவில்லை. கொள்ளி டத்தில் தலைப்பில் அப்பர் அணைக் கட்டுக் கட்டினபிறகுதான் காவேரிக்கு நன்றாய் ஜலம் வரலாயிற்று.

இப்படி மேல் அணைக்கட்டு கட்டினதால் கொள்ளிடத்திலிருந்து பிரியும் வாய்க்கால்களுக்கு ஜலம் குறைந்து போயிற்று. அதனால் வரும் ஜலநஷ்டத்துக்கு ஈடு செய்ய லோயர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் கீழ் அணைக்கட்டு ஒன்று 70 மையி லுக்கு அப்பால் கட்ட வேண்டியதா யிற்று.

அதன் பிறகு 1887_-1889 ஆம் வருஷத்தில் கல்லணையில் காவேரி, வெண்ணாறு, ஹெட் ரெகுலேடர்கள் கட்டவே, காவேரி, வெண்ணாறு இந்த இரண்டு நதிகளிலும் ஜலம் போவதை ஒழுங்குபடுத்துவது ரொம்ப ஸுலப மாயிற்று.

பிற்பாடு செய்த சீர்திருத் தங்கள் எல்லாம் வெள்ள காலத்தில் ஜலத்தை சீர்படுத்தவும் ஜலத்தை ஸரிவர வாய்க்கால்களில் பாய்ச்சவுமே செய்யப்பட்டவை. இவைகளால் காவேரி பாசன ஏற்பாட்டுக்கும் இந்தி யாவிலுள்ள மற்ற பாசன ஏற்பாடுகளுக் கும் ரொம்ப வித்யாஸமிருக்கிறது.
(தொடரும்)                                                                         (நன்றி.விடுதலை மலர் 05.11.2011

No comments:

Post a Comment