Saturday, May 30, 2009

தமிழ் சினிமா வயது ஒரு சர்ச்சை

தமிழ் சினிமாவின் தொடக்க ஆண்டு 1931 எனத் தவறுதலாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழில் முதலாவது பேசும்படம் ‘காளிதாஸ்’ வெளியான ஆண்டு 1931. அதை ஆரம்ப ஆண்டாக வைத்துத்தான் தமிழக அரசு தமிழ் சினிமா வயதைக் கணக்கிட்டுள்ளது. உண்மையில் அது தமிழ் சினிமாவின் ஆரம்ப ஆண்டு அல்ல. ‘கீசகவதம்’ படம் வெளியான ஆண்டு 1916. அதுதான் தமிழ் சினிமாவின் தொடக்க ஆண்டு. இந்தக் கணக்கின்படி 2016 – ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் நூற்றாண்டு. இதற்குப் பதிலாக தமிழ் சினிமாவின் தொடக்கம் 1931 எனத் தவறுதலாகச் சொன்னால், 2031 - இல்தான் நூற்றாண்டு வரும். 1916 – ஆம் ஆண்டு ‘கீசகவதம்’ படம் தமிழ்நாட்டில் வெளியானதற்கு உரிய சான்றுகளைத் தமிழியியல் ஆய்வாளர் பாவேந்தன் இக்கட்டுரையில் நிறுவியுள்ளர். தமிழக அரசு இக்கட்டுரையைப் பரிசீலனை செய்து, தமிழ் சினிமாவின் தொடக்க ஆண்டினைத் திருத்தம் செய்வதற்கான கோரிக்கையாக இக்கட்டுரை வெளியிடப் படுகிறது.

சினிமோட்டோகிராப் கருவியை லூமியர் சகோதரர்கள் அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே 7 ஜூலை 1896 அன்று இந்தியாவின் மும்பை நகர வாட்சன் தங்கும் விடுதியில் இந்தியாவின் முதல்; சலனப்படக் காட்சி நடைபெற்றது.
19–ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சலனப்படங்களை அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயண சினிமாக் காட்சியாளர்கள் (Traveling Cinema Exhibitors ) இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தினர்.

எச்.எம்.பட்டேகர் (பம்பாய்), ஷிராலால்சென் (கல்கத்தா), ஜெ.எப். மதன் (கல்கத்தா), பீ.பாலிவால் (பம்பாய்) மேனக் கே. சேத்னா (பம்பாய்), சாமிக்கண்ணு வின்சென்ட் (சென்னை) போன்ற இந்தியர்கள் பல்வேறு சலனப்படங்களை இந்தியாவில் மக்களுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகள்.

இந்திய மாகாணங்களில் நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத கால கட்டம் முதல், இந்தியாவின் முதல் பேசும் படம் உருவான 1931 – ஆம் ஆண்டு வரை பயண சினிமாக் காட்சிக் கருவி, டெண்ட்டுகள், பெஞ்சுகளை இரயில்கள், மாட்டு வண்டிகள் மூலமாக எடுத்துக் கொண்டு சிறு நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, இந்தப்புதிய மகிழ்வூட்டும் ஊடகத்தை அறிமுகப் படுத்தியவர்கள் அந்தப் பயண சினிமாக்காட்சியாளர்களே*
இதுபோன்ற பயண சினிமாக்காட்சியாளர்கள் உலகமெங்கும் உள்ள தொடக்க சினிமா வரலாற்றில் முழுமையாக ஆவணவப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்திய சினிமா வரலாற்று நூல்களில் இத்தொடக்க காலப் பயண சினிமாக் காட்சியாளர்கள் பற்றிய வரலாறு வெறும் குறிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதனை நமது சினிமா வரலாற்றை எழுதுதலில் ஏற்பட்ட ஓர் அவலம் என்றே கூற வேண்டியுள்ளது.

பம்பாய் மாகாணத்தில் நடைபெற்ற பயண சினிமாக் காட்சியில் காட்டப் பட்ட Life of Jesus Christ படத்தைப் பார்த்த தாதா சாகேப் பால்கே இந்தியப் புராணவியலை அடிப்படையாகக் கொண்டு “இந்துஸ்தான் பிலிம் கம்பெனி” மூலம் தன் முதல் படமான “ராஜா ஹரிச்சந்திரா” என்ற மௌனப் படத்தை 1913-ஆம் ஆண்டு தயாரித்தார்.

அவரது முயற்சியே இந்திய சினிமா வரலாற்றின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது. பால்கேவின் படங்களை சென்னையில் பார்த்த தமிழரான நடராஜ முதலியார் 1916–ஆம் ஆண்டு சென்னையில் ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற பெயாரில் முதன் முதலாக “கீசகவதம்” (1916) என்ற தென்னிந்தியாவின் முதல் சலனப்படத்தைத் தயாரித்தார். (அன்றைய ஆங்கிலக் காலனிய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் “இந்தியா” என்ற பெயரில் இதழ் நடத்திய பாரதி பட்டபாடு இங்கு மனங்கொள்ளத்தக்கது). ‘கீசகவதம்’ படத்திறகுப் பின்னர் 1917 – 1923 காலகட்டத்தில் நடராஜ முதலியார் ஆறு சலனப்படங்களைத் தயாரித்தார்.

பால்கே எடுத்த படங்கள் இந்தியாவின் முதல் “சுதேசி”ப் படங்களாகக் கருதப்படுகின்றன. பால்கே படம் எடுத்த சில ஆண்டுகளில் அவரைப் போலவே துணிவுடன் ‘இந்தியா’ எனப் பெயர் வைத்துப் படம் தயாரித்த நடராஜ முதலியாரை ‘தென்னகத்தின் தாதா சாகேப் பால்கே’ என்று அழைப்பதே பொருத்தம்.

இவ்வாறாக சாதனை செய்த நடராஜ முதலியார், முதல் சலனப்படம் எடுத்த 1916 –ஆம் ஆண்டை தமிழ் சினிமாவின் தொடக்க ஆண்டாகக் கொள்ளாமல் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளிவந்த 1931 – ஆம் ஆண்டை 50 - ஆம் ஆண்டு என சினிமா நூலாசிரியர் அறந்தை நாராயணன் முதன் முதலாகக் கருத்து தொரிவித்தார்.1981 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற தனது நூலின் முதல் பக்கத்தில் ‘மகாகவி பாரதி முதல் நூற்றாண்டு, தமிழ் சினிமா ஐம்பதாம் ஆண்டு’ என அவர் குறிப்பிட்டார்.

அவருடைய கருத்தின் அடிப்படையில் 1981 – ஆம் ஆண்டை தமிழ் சினிமாவின் 50-ஆம் ஆண்டு எனவும், 1991-ஆம் ஆண்டை தமிழ் சினிமாவின் 60-ஆம் ஆண்டு எனவும் தமிழக அரசு கொண்டாடியது. அதே காலகட்டத்தில் இந்திய அரசின் தகவல் ஒலி பரப்பு அமைச்சகத்தின் சார்பில் 22-வது பன்னாட்டுத் திரைப்படத் திருவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வின் போது தமிழ் சினிமா வரலாற்றை அதிகாரப் பூர்வமாக ஆங்கிலத்தில் வெளியிட புகழ்பெற்ற ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் சரவணன் தலைமையில் ஒரு குழு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில் டி.ராமனுஜம், நடிகர் கமலஹாசன், திரு.கே.சொர்ணம், வரலாற்றரிஞர் ராண்டர்கை, பிலிம் நியூஸ் ஆனந்தன், அறந்தை நாராயணன் ஆகியோர் உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் அவ்வை நடராஜன் பங்கு வகித்தார். இக்குழு, தமிழ்ச் சினிமாவின் வயதை அறுபதா
கக் கணித்து History of Tamil Cinema நூலை 1991-ஆம் ஆண்டு வெளியிட்டது.
அதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டை 75 ஆண்டு நிறைவடைந்த விழாவாகத் தமிழக அரசும் திரைப்படத் துறையினரும் கொண்டாடினர்.

லூமியர் சகோதர்கள் சலன மௌனப் படம் எடுத்த 1896- ஆம் ஆண்டை உலக சினிமா வரலாற்றின் தொடக்கமாகவும், பால்கே சலனப் படம் தயாரித்து வெளியிட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ வெளியிடப்பட்ட ஆண்டை (1913) இந்திய சினிமாவின் தொடக்க ஆண்டாகவும் கொண்டு சினிமா வரலாறு எழுதப்படுகிறது.
உலகின் முதல் பேசும் படமான ஜாஸ் சிங்கர் வெளிவந்த 1917-ஆம் ஆண்டை உலக சினிமாவின் தொடக்கமாகவும், முதல் இந்தி பேசும் படமான ‘ஆலம் ஆரா’ வெளிவந்த 1931-ஆம் ஆண்டை தொடக்க ஆண்டாகவும் கருதும் போக்கு உலக , இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத போது, நாம் மட்டும் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளிவந்த 1931-ஆம் ஆண்டைத் தமிழ்ச் சினிமாவின் தொடக்க ஆண்டாக ஏன் கருத வேண்டும்?

சினிமா நடிகைகள் தங்கள் வயதைக் குறைத்துக் கொள்வது போல சினிமா வரலாற்றுக்கும் வயதைக் குறைப்பது தமிழர்களின் வரலாற்று அறிவின்மையின் வெளிப்பாடே.

தென்னகத்தின் தாதாசாகேப் பால்கே நடராஜ முதலியார் (1885 – 1972)
தென்னகத்தின் முதல் சலனப்படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் ரங்கசாமி நடராஜ முதலியார். இவர், வேலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற வணிகரான ரங்கசாமி முதலியாரின் மகன். அன்றைய காலகட்டத்தில் புகழ்பெற்ற மருத்துவர் எம்.ஆர். குருசாமி முதலியார் இவரது உறவினர்.

பள்ளிப் படிப்பை முடித்த நடராஜ முதலியார் தன் தந்தையின் வழிகாட்டுதலுடன் வாட்சன் குழுமம் என்ற பெயாரில் சைக்கிள் இறக்குமதி வணிகம் செய்து வந்தார். இவருடைய தொழில் பங்குதாரரான எம்.எம். தர்மலிங்கம் முதலியாரின் உதவியுடன் 1906 – ஆம் ஆண்டு மோட்டார் கார் இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டார். அமொரிக்கக் கார்களை சென்னை மாகாணத்தில் முதன் முதலாக இறக்குமதி செய்து சாதனைகள் புரிந்தவர் இவர்தான்.

தாதாசாகேப் பால்கே ‘ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனி’ என்ற பெயாரில் தயாரித்து வெளியிட்ட ராஜாஹரிச்சந்திரா (1913) சலனப்படத்தைப் பற்றிய செய்திகளும், துண்டறிக்கைகளும் நடராஜ முதலியாரை சலனப்படம் தயாரிக்கத் தூண்டியன.

அன்றைய காலனிய அரசின் வைசிராயாக இருந்த கர்சன் பிரபுவின் பதவியேற்பு நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்க வருகை தந்த பிரிட்டிஷ் அரசின் அதிகாரப் பூர்வ புகைப்படக் கலைஞரும் ஒளிப்பதிவாளருமான திரு. ஸ்டூவர்ட் பம்பாய் மாகாணத்தின் பூனே நகரில் தங்கியிருந்ததை அறிந்தார். புனேவில் அவர் சலனப்பட உருத்துலக்கும் நிலையத்தையும் நடத்தி வந்தார். இதனை அறிந்த நடராஜ முதலியார், அவாரிடம் பயிற்சி பெற பூனே சென்று அங்கு முறையாக சலனப்படப்பிடிப்பு நுட்பங்களைக் கற்றார்.

மேலும் சலனப்பட பிலிம்களை உருத்துலக்கும் பணிகள், படியெடுத்தல் இன்னும் பிற தொழில் நுட்பங்களை முழுமையாகக்; கற்றார். பூனேவில் சில துண்டுப் படங்களைப் படம்பிடித்து ஸ்டூவர்ட் அரங்கத்திலேயே திரையிட்டு அவரது பாராட்டுதலைப் பெற்றார்.

சென்னை திரும்பிய நடராஜ முதலியார் 1917- ஆம் ஆண்டு “இந்தியா” பிலிம் கம்பெனி என்ற பெயரில் சலனப் படத் தயாரிப்பகம் ஒன்றைத்; தொடங்கினார். இக்காலகட்டத்தில் தஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சார்ந்த திரு.மருதப்ப மூப்பனார் என்பவர், இங்கிலாந்துக்குச் சென்று புகைப்படக் கலையைக் கற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

அவர் தன்னிடமிருந்த வில்லியம்சன் புகைப்படக் கருவியையும், உருத்துலக்கும் கருவியையும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த நடராஜ முதலியார் அவரிடமிருந்து ரூ.1,800-க்கு விலை கொடுத்து அவற்றை வாங்கினார்.

தன்னுடைய சலனப்படத் தயாரிப்புப் பணிகளுக்கு நம்பகமான உதவியாளர் தேவை என்பதால் தன்னுடைய நண்பரான ஜெகநாத ஆச்சாரி என்பவரை ஸ்டூவர்ட்டிடம் சலனப்படம் பிடிக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள பூனே நகருக்கு அனுப்பி வைத்தார். இவர் ஏற்கெனவே புகைப்படக் கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்ற கலைஞராவார்.

அவருடைய உதவியுடன் தன்னுடைய மில்லர்ஸ் சாலை “டவர் ஹவுசில்” தென்னகத்தின் முதல் சலனப்படப்பிடிப்பு நிலையத்தை உருவாக்கினார். இதற்காகத் தன்னுடைய இல்லத்திலேயே பந்தலை உருவாக்கினார். Nரிய ஒளி ஊடுருவலைச் சீராக்கப் பந்தலின் கூரை மீது பொரிய வெள்ளைத் திரையைக் கட்டினார்.

சென்னையைச் சேர்ந்த ரங்கவடிவேலு மற்றும் சென்னையில் வழக்கறிஞராகவும், நடிகராகவும் பணியாற்றி வந்த பம்மல் சம்பந்த முதலியார்; ஆகியோரின் உதவியுடன் கதையமைப்பையும், நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சியையும் வழங்கினார்.

முதல் சலனப்பட முயற்சி மேற்கொள்ளும்போது கீசகனை வதம் செய்யும் வன்முறையையும், இரத்தம் சிந்தும் காட்சியையும் படம் பிடிப்பதா என அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தடுத்த போது அவர்களின் கருத்துக்களைப் புறக்கணித்தார்.

அப்படத்தை உருவாக்கும் பணிகளுக்காக அரங்க நிர்மாணம், உடையலங்காரம், நடிகர்களுக்கு ஊதியம், கச்சா பிலிம், உருத்துலக்கும் நிலையம் மேலும், படியெடுக்க, விளம்பரப்படுத்த என அக்காலகட்டத்தில் ரூ.35,000 செலவு செய்தார்.
ஐந்து மாதங்களில் 6000 அடி படமாகத் தயாரிக்கப்பட்டது ‘கீசகவதம்’.
1918-ஆம் ஆண்டு சென்னையில் அச்சலனப் படம் இருவாரம் ஓடியது. அன்றைய சலனப்படங்களில் காட்களுக்கு இடையே படவிளக்கக் குறிப்புகள் (Title Cards) போடும் முறை இருந்தது. அதற்கான தமிழ், ஆங்கிலக் குறிப்புகளை நடராஜ முதலியார் தன் உறவினரான மருத்துவர் குருசாமி முதலியார், திருவேங்கிடசாமி முதலியாரின் துணையுடன் தயாரித்தார். இப்படத்திற்கான இந்திப் படவிளக்கக் குறிப்புகளைக் தயாரித்தவர் மகாத்மா காந்தியின் மகனான திரு.தேவதாஸ் காந்தி அவர்கள்.

கீசகவதம், கராச்சி, ரங்கூன் நகரங்களில் திரையிடப்பட்டது. 35 ஆயிரம் ரூபாயை முதலீடாகப் போட்ட நடராஜர் 15ஆயிரம் ரூபாய் கூடுலாக லாபம் ஈட்டினார். இப்படத்தின் பம்பாய் மாகாண விநியோக உரிமையை ஆர்தர்ஷ் ராணியின் நிறுவனமும் (பின்நாளில் இந்தியாவின் முதல் பேசும் படத்தயாரிப்பாளர்) கல்கத்தாவின் ஜெ.எப்.மதன் நிறுவனமும் பெற்றிருந்தன.

முதல் படத்திற்காக உருவாக்கப்பட்ட அரங்குகளிலேயே தன்னுடைய இரண்டாவது படமான ‘திரௌபதி மான சம்ரக்ஷணம்’ படத்தையும் தயாரித்து ரூ.75000 லாபம் ஈட்டினார். இப்படத்தில் திரௌபதி பாத்திரப்படைப்பில் இங்கிலாந்துப் பெண்மணி திருமதி. வயலெட்பரியும், ஆங்கிலம் தெரிந்த துரைசாமிப்பிள்ளை துச்சாதனனாகவும் நடித்தனர். இப்படம் 1918-1921-ஆம் ஆண்டுகளில் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து மயில் ராவணன் அல்லது மாருதி விஜயம் (1918), லவகுசா (1919), ருக்மணி கல்யாணம் (1921), சத்தியபாபா (1920), மார்க்கண்டேயா அல்லது சிவலீலா (1923) என 1917-1923-வரை ஏழு ஆண்டுகளில் ஆறு சலனப்படங்களைத் தயாரித்ததாகத் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுவார். அவருடைய படங்கள் அனைத்தும் 7000 அடி நீளமுடையதாக இருந்தன. பல்வேறு துண்டுப் படங்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

மகாத்மா காந்தி அந்நியத் துணிகளைப் புறக்கணிக்க அறைகூவல் விடுத்ததைத் தொடர்ந்து அது தொடர்பான படம் எடுக்க பம்பாய் துணிஆலை உரிமையாளர்கள் சங்கத்தை அணுகினர். இம்முயற்சி வெற்றி பெறவில்லை. 1924-ஆம் ஆண்டில் படப்பிடிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பொருளிழப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவருடைய ஒரே மகனின் பிரிவும் அவரை சினிமாத் தொழிலை விட்டு அகலச் செய்தன.

1972-ஆம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்த அவர் 1970-ஆம் ஆண்டு தமிழக அரசால் அங்கீகாரிக்கப்பட்டது ஆறுதலான செய்தி. தமிழ் சலனப்பட தயாரிப்பு முன்னோடி நடராஜ முதலியரை அவர் வாழ்ந்த காலட்டத்தில் விரிவாக நேர்காணல் செய்து அவரின் படத் தயாரிப்பு முயற்சிகள் பற்றி ஆவணப்படுத்தப்படாதது நம் சமூக அமைப்பின் மிகப் பெரிய துயரமாகும்.

நன்றி: ஓம்சக்தி மாத இதழ் மே 2009

1 comment:

  1. jazz singer movie was released in the month of October year 1927.

    ReplyDelete